Friday, 9 December 2011

சந்தேகம்



உன் கண்ணீரைத் துடைக்க வரும் 
என் விரல்களையா
உன் கண்கள் 
தங்களைக் குத்த வருவதாய்ச்
சந்தேகிக்கின்றன...?

தெரிந்து கொள்..! 
துடைத்துவிட உன் விரல்கள் 
மட்டும் இருக்குமாயின்
காலம் பூராக அழுவதற்கும் 
என் கண்கள் தயார்...!

மனசு


நாமிருவரும்

பேசிக்கொண்டிருப்பதை விட

மௌனமாய்

அமர்ந்திருக்கும்போதுதான்

அதிகம் பேசிக் கொள்கிறோம்..!

அர்த்தம்

 
வார்த்தைகளை விட

மௌனம் அழகானது...

 
உன்னால்
 
சொல்லமுடியாததை எல்லாம்

உன் மௌனம்

எனக்குச் சொல்லிவிடும்...

 
நீ பேசும்போது

அழகாயிருக்கிறாய்!

மௌனமாய் இருக்கையில்

அதனிலும் அழககாயிருக்கிறாய்!!

பரிசு

 

எப்படி முடிகிறது உன்னால்

நான் தரும்

வலிகளை எல்லாம்

வாங்கிக்கொண்டு

புன்னகையை மட்டுமே

எனக்குப் பரிசளிக்க...?

அன்பு


உனது அழகு

அன்பானதா என்று

எனக்குத் தெரியாது


ஆனால்

எனது அன்பு

அழகானது என்று மட்டும்

நிச்சயமாய்த் தெரியும்!

கிறுக்கி

 
உன் கோழிகிறுக்கல்

கையெழுத்தைப் பார்த்துவிட்டு

சரியான

கிறுக்கன் என்று

நினைத்திருந்தேன்...


கடைசியில் கிறுக்கியாய்ப்

போனதென்னவோ நான்தான்

உன்னிடத்தில்...!

தோல்வி

 
வெற்றியின்

உற்ற நண்பி நான்!

விளையாட்டாய்க் கூட

எனக்குத் தோற்றுப் போகச்

சம்மதமில்லை...

 
ஆனால் உன்னிடத்தில் மட்டும்

தோற்றுப் போவதையே

சம்மதிக்கிறேன்...!

பெருமிதம்

 

வெற்றிப் பெருமிதம் உன்னிடத்தில்

என்னை நீ

வென்றுவிட்டதால்!

அதே பெருமிதம் என்னிடத்திலும்

உன்னிடம் நான்

தோற்றுப் போனதால்!!

முண்டக் கண்ணி

 

புகைப்படம் எடுக்கையில்

சிதறுகின்ற

சின்ன பிளாஷ் ஒளியையே

தாங்கமுடியாமல்

கண்களைக் கூசிக்கொள்ளும்

என்னிடமா

ஆயிரம் கேமராக்களின்

வெளிச்சத்தை

ஒட்டு மொத்தமாய்க்

கொண்டுவந்து விசிறியடிப்பது?


என்ன முழிக்கிறாய்!

உன்னிடம்தான் சொல்கிறேன்

எத்தனை முறை சொல்வது

கண்களை அப்படி

உருட்டிப் பார்க்காதே என்று...

நினைவுகள்

 
கூடவே வந்து

தொந்தரவு செய்யாதே!!

என் நிழல் கூட

சமயங்களில்

என்னைத் தொடர மறந்துவிடுவதுண்டு...

 
ஆனால் உன்

நினைவுகளோ

என்னைப்

பின் தொடர்ந்து கொண்டே...!

ஆறு மணிக் கனவு

 

என் அறையின்

சுவர்க் கடிகாரமும்

என் இதயமும்
 
போட்டி போட்டுக் கொண்டு

துடிக்கின்றன...

 
விடிந்தும் விடியாத

காலப் பொழுதில்

கட்டிலின் இதம் தரும் சுகத்தில்

உறக்கத்திற்கும் விளிப்புக்குமிடையே

ஓர் மயக்க நிலை...!

 
மப்பும் மந்தாரமுமாய்

வானம் அழ ஆரம்பிக்க...

குளிர் காற்றொன்று
 
எங்கிருந்தோ வந்து
 
என்னைத் தழுவ...

என் எதிர்காலம்
 
கண் முன்னே
 
அழகாய் விரிகிறது...

 
தூரத்தே மங்கலாய்
 
அழகிய ஒரு உருவம்

ரமணிச்சந்திரன்
 
கதாநாயகன் போல் உயமாய்

எனக்குப் பிடித்தமான
 
மெல்லிய தாடியுடன்

அவன் எதோ
 
என்னிடம் சொல்லத் தொடங்க

என் தாய் என்னை தேநீர் குடிக்க எழுப்புகிறார்..

 
உறக்கம் கலைய

கனவு கலைய

கற்பனை கலைய

துயில் கலைகிறேன் நான்...

எனக்கே என்மேல் கோபம் வருகிறது!

 
ச்சே...

இந்தக் கன்றாவிக்குதான்
 
 உம்மா சொன்னாவோ

"விடிஞ்ச பிறகும்
 
படுக்காதேடி!" என்று...

ஆசை

 
சல சலக்கும்

அருவியின் சத்தம்!

அருகிலேயே

எனக்குப் பிடித்தமான

ஒற்றை ஓலைக் குடிசை!!

என் தலை கோதும்

உன் விரல்கள்!

உன் மடியிலே

குழந்தையாய் நான்!!

வேறென்ன வேண்டும் எனக்கு?

பூகம்பம்


தந்தியடிக்கும்

பற்களுக்கிடையே சிக்கி

சம்பந்தமில்லாமல் வெளிவருகிறது

வார்த்தைகள்...


ச்சே..என்ன இது

உன்னைக் காணும்போது

மட்டும் என்

தொண்டைக் குழிக்குள்

என்ன பூகம்பமா நேர்கிறது?

கிறுக்கல்

 
காதலிப்பவர் எல்லாம்

கவிதை எழுத வேண்டும் என்பது என்ன

சர்வதேச சட்டமா?

அல்லது காதலர் சட்டமா??

யார் யாரோவெல்லாம்

கிறுக்கியதைக் கொண்டுவந்து

படித்துக்கொண்டிருக்கிறாயே...!


அடியே என்

பேதைக் காதலியே...

எனக்கு மட்டுமே கிடைத்த

அற்புதமான

கை கால் முளைத்த

கவிதை நீதான்

என்பதை

எப்போது புரிந்துகொள்ளப் போகிறாய்?

கர்வம்

 
என் கவிதைகளுக்கு

கர்வம் அதிகம்!!

அவற்றை நீ

படிக்கிறாய் என்பதால்...

முகம்

 
இப்பொழுதெல்லாம்

என் ஜன்னலிலும்

நிலவு!

எதிரில்-உன்

முகம்!!

ஆதி மூலம்

 
என் கவிதையின் ஆதிமூலமே!

உன்னைப் பார்த்த பின்புதான்

நான் கவிதை

எழுதவே ஆரம்பித்தேன்

ஆனால் உன்னைப் பற்றி

எழுதும்போது மட்டும்

என்னிடத்தில் வார்த்தைகள்

வரவில்லையே ஏன்?

வலி

 
இருவிழிப் பார்வை மட்டும்

உனது!

அதனால் உண்டாகும்

வலிகள்

வேதனைகள்

எல்லாமே எனது!!

பார்வை


இந்த உலகில்

என்னை எதுவுமே இப்படி

திணறச் செய்யவில்லை!

அந்த இருவிழிப் பார்வை தவிர...

அவனைக் கடந்து செல்கையில்

மனசினுள் பனி!

சாலையின் மரங்களிலெல்லாம்

வானவில்!!

கடந்து செல் என்று இதயமும்

கடக்காதே என்று பாதமும் சொன்னால்

யார் பேச்சை

இவள் கேட்பதுவோ?

Thursday, 8 December 2011

பிளாஸ்டிக் புன்னகை

தீயில் கால்

வைத்துவிட்டதைப்போல்

உள்ளம் வலிக்கிறது...

பழகிய முகங்கள்

சமயங்களில் சிந்தும்

பிளாஸ்டிக் புன்னகையில்...!

மழை

சோகங்களை 
சேர்த்து வைக்கத் தெரியவில்லை
மேகங்களின்
கண்ணீர் !

அமாவாசை

 

நிலவு செத்துப்போன இரவில்

மேகங்களின் அமைதி ஊர்வலம்...

சாவி

 

சந்தோசப்பட்டிருப்பேன்

உன் மனசையும்

திறக்க முடிந்திருந்தால்..!

பேச்சு

 
நீ கேட்டுக் கொண்டிருக்கிறாய்

என்று தெரிந்ததும்

நான்

அதிகமாய் பேசுகிறேன்...

அடக்கம்


நீ தலை தாழ்த்திச் செல்வதுதான்

என்னைத் தலை நிமிர்த்தி

உன்னைப் பார்க்கச் செய்கிறது...!

கண்ணீர்க் கவிதை

 
புன்னகையால் எழுதும்

கவிதையை விட

கண்ணீரால் எழுதும்

கவிதை வலிமையானது!

என் கவிதைகளும்

வலிமையடைகின்றன

உன்னைப் பற்றி எழுதும்போது...

கையெழுத்து


ஒ!

என் கையெழுத்து

அழகாய் இருக்கிறதே

பார்க்கிறேன்

காகிதத்தில் நான் எழுதியிருப்பது

உன் பெயரை அல்லவா?

எதிர்பார்ப்பு


என் வானமெங்கும்

முகில்கூட்டங்கள்

மழையைத்தான் இன்னும் காணவில்லை!

என் பூமியெங்கும்

பசும் புள்வெளிகள்

ஒரு பூ கூட இன்னும் பூக்கவேயில்லை...!!

ஆயுதம்

 
இத்தனை மென்மையான உனக்குள்

இத்தனை கூறிய ஆயுதங்களா?

நீ பார்த்தாலே

என்னில்

ரத்தம் கசிகின்றதே...

உறவுகள்

உறவுகள் எமக்கு

இறைவன் அளித்த அருட்கொடை!

அங்கே

புரிந்துணர்வு இல்லையென்றால்

ஒவ்வொரு நாளும் யுத்தம்!!

அதுவே அழகாய் அமைந்துவிட்டால்

மண்ணில் தோன்றும் சொர்க்கம்!!!

மண்

நீ என்னுடன் பேசமாட்டாய்!

எனக்குத் தெரியும்...

ஆனால்

உன் பாதம்

தொட்ட அனுபவம் பற்றி

அந்தத் தெருவோரத்து மண்

என்னுடன்

மணிக்கணக்காய்ப் பேசிக்கொண்டிருக்கும்...!

நீ

உன் விழிகள்

கவிதை படித்துக்கொண்டிருந்தன!

என் விழிகளும்

படித்துக்கொண்டிருந்தன...

கவிதை படிக்கின்ற

ஒரு கவிதையை!!

தொ(ல்)லைபேசி

எனக்குத் தொல்லை கொடுக்கும்

உன் தொலைபேசி எண்கள்

தொல்லை கொடுப்பது

எனக்கு மட்டுமல்ல!

என் தந்தைக்கும் சேர்த்துதான்...

கிடைக்கும் சம்பளத்தில் பாதி

என் தொலைபேசிக் கட்டணத்திற்கே

சரியாகிவிடுகிறதே...!

பிடிப்பு

எனது கவிதை

எனது கனவு

எனது தலையணை

எனது நண்பிகள்

இவை என் வாழ்வில் பிடிப்பு மிக்கவை

இருந்தபோதிலும்

உன் நினைவுகளுக்கு இவற்றை என்னால்

ஒப்பிட முடிவதில்லை

உன் நினைவுகள் புன்னகை

சிலவேளை கண்ணீரும் கூட

துடைத்துவிட-உன்

கைக்குட்டை இருப்பதால்...!

யாசகம்

உன் தீவிர வாசகன்

இப்பொழுதுகளில் யாசகனாய்...

யாசிக்கின்றேன்-உன்

ஒரேயோர் வார்த்தைக்காய்...

அதற்கு நீ

அட்சய பாத்திரமாய்

இருக்கத் தேவையில்லை

பிச்சைப் பாத்திரமாய்

இருந்தாலே போதும்...!

வாள் விழி

வாள் வீழ்த்தி விழுவது

வீர மரணம்!

எனக்கோ

எந்தநாளும் மோட்ச மரணம்!!

உன் விழி வேல் வீழ்த்தி விழுகின்ற

மோட்ச மரணம்!!!

Friday, 2 December 2011

சின்ன வயது ஆசை




ஏரோப்ளேன் செல்கையில் இப்போதும்
கால்கள் துறு துறுக்கும்
ஓடிச் சென்று பார்க்க..


சூயிங்கம் சாப்பிடுகையில்

அனிச்சையாய் நாவில் எழும் முட்டை

வயதறிந்ததும்

வாயினுள்ளே அடங்கிப்போய்விடும்...


வீதியில் கட்டங்கள் வரைந்து சிறுவர்கள்
விளையாடுகையில்..

மனமும் கூடவே தெத்திக்கொண்டு

பின்னோக்கிச் செல்லும்!!!!

டிசம்பர் வெள்ளம் வீதியில் பாய்கையில்

சகோதரி மகளுக்குக் கப்பல் விட்டுக் காட்டுவதாய்ச் சொல்லி
தண்ணீரில் இறங்கி ஆடை நனைத்து

காகிதக் கப்பல் விடுவது...
அவளுக்கு விளையாட்டுக் காட்டவா

எனக்கா என்று விளங்கவில்லை...?

மதியம் சாப்பிட்டு வீட்டினர்
கண்ணயரும் சமயம் பார்த்து

இடியின்றி மின்னலின்றி
சோவெனப் பெருமழையொன்று

அழகாய்ப் பெய்யும்..

மழையில் குளித்து வளவெல்லாம்

சுற்றித் திரிவதுவும்
மழை விட்டதும் மரத்தை

உலுக்கிச் சிலிர்ப்பதுவும்..
உம்மா கண்ணில் பட்டால்

"காச்சல் வரும்டீ" என
ஏச்சுக் கேட்பதுவும்

பெரிசாகியும் போகவேயில்லையே-இந்த
சிறுபிள்ளைத்தனம்

என்று நினைக்கையில்...
சீரியஸாய்க் கதைத்துக்கொண்டே

நிலத்தில் கிடந்த
ஷொப்பிங் பேக் ஒன்றை ஊதி

கைகளுக்கிடையே வைத்து
உடைக்கும் என்-உம்மாவில்

என்னைக் காண்கிறேன்..!!!

Wednesday, 23 November 2011

துளிகள்

எங்கே போய் சேரப்போகிறோம்

என்று தெரியாமல்

விண்ணிலிருந்து விடைபெறும்

மழைத்துளிகள்!

எதற்காக அழுகிறோம்

என்று தெரியாமல் என்

கண்ணிலிருந்து விடைபெறும்
 
கண்ணீர்த்துளிகள்... !!
 

Wednesday, 9 November 2011

வானவில்


எந்தத் தூரிகை கொண்டு
யார் தீட்டிய
ஒவியம் இது
வானில்?
வானவில்!



காதல்கரை


கடற்கரை மணலில்
நான்
எழுதிவைத்த நம் பெயரை
அலை வந்து அழிப்பதுவும்..
மீண்டும் நான் எழுதுவதும்
சலித்துப் போகவேயில்லை....
அலைக்கும்,எனக்கும்......!!!

தேர்தல் களத்தில் காதல்

நான்
மேடையில் பேசும் அரசியல்வாதிகளைப்போல்
வாக்குறுதிகளை எல்லாம்
அள்ளிவளங்குகிறேன்!
நீயோ
பட்டுத் தெரிந்துகொண்ட
மக்களைப்போல்
அவற்றையெல்லாம்
அமைதியாக
நிராகரித்துக்கொண்டிருக்கிறாய்!!

Tuesday, 8 November 2011

நிழல்



நிழலே!

நீ நிஜத்தின் விம்பம்.

விம்பங்கள் தோற்றுவிக்கப்படலாம்

ஆனால்-அவை

நிலை பெறப்போவதில்லை.

நிலையற்ற எல்லாமே

அழகானவையே..!

மௌன மொழி


புராதன வரலாற்று

ஏடுகளையெல்லாம்

புரட்டிப் பார்க்கிறேன்...

உன் விழிகள் பேசும்

மௌன மொழி

எவ்வினத்தைச்

சேர்ந்ததென்று...!

Thursday, 3 November 2011

காதல் போட்டி


யார் காதல் பெரிதென்று

நாம் போட்டுக்கொள்ளும்

சண்டையில்

நம்மிருவருக்குமே தெரியாமல்

ரகசியமாய்க் கைகுலுக்கிக்கொள்கிறது

நம் காதல்...!

சுவடு


தெருவில்தான்

நடந்துசெல்கிறாய்...

என் இதயமெங்கும்- உன்

பாதச்சுவடுகள்...!!!

Sunday, 30 October 2011

கவிதை


உன்னை சந்தித்தபின்

சிந்திப்பதெல்லாம்

கவிதைகளாய்...!